பழனி அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்; தோட்டத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிப்பு - போலீஸ் விசாரணை
|தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 18 துப்பாக்கி தோட்டாக்களை கண்டெடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை மோகன்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். அவர் தோட்டத்து காவலுக்காக கும்பகோணத்தில் இருந்து கார்த்தி என்ற இளைஞரை பணியில் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மோகன்ராஜ், கார்த்தி இருவரும் தோட்டத்தின் அருகே அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதில் ஒரு குண்டு கார்த்தியின் உடலிலும் பாய்ந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக கார்த்தியை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 18 துப்பாக்கி தோட்டாக்களை கண்டெடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.