விருதுநகர்
வீடு, மரத்தின் அடியில் பட்டாசு தயாரிப்பு
|வீடு மற்றும் மரத்தின் அடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் அந்த கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த 12 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகள், பட்டாசுகடைகளில் திடீர் சோதனைகளை செய்து வருகிறது.
இந்தநிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் அதிகாரிகள் சொக்கலிங்காபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆலையில் தொழிலாளர்கள் மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கு இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலையின் உரிமையாளர் புதுதெருவை சேர்ந்த கார்த்திகேயன், மதுரையை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நாரணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வசித்து வரும் மாரியப்பன் மனைவி பாண்டீஸ்வரி, முனியசாமி மகன் யுவராஜ், பாஸ்கர் மகன் மாரிச்செல்வம், சவரிமுத்து மகன் சகாயம் ஆகியோர் அனுமதியின்றி வீட்டில் பேன்சி ரக வெடிகளை தயார் செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பட்டாசுகளை உற்பத்தி செய்யப்படுவதை அறிந்த மாவட்ட உயர் அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.