பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|கடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தை சேர்ந்த சித்ரா, நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அம்பிகா மற்றும் மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.