< Back
மாநில செய்திகள்
ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது -  கடுமையான நிபந்தனைகள் விதித்தது உயர்நீதிமன்றம்
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது - கடுமையான நிபந்தனைகள் விதித்தது உயர்நீதிமன்றம்

தினத்தந்தி
|
19 Oct 2023 7:35 AM IST

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தென் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த அவர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் இந்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் போலீசாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து திருச்சி, புதுகோட்டை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 16 இடங்களில் அக்டோபர் 22ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தவுள்ளது.

இந்நிலையில் பேரணிக்கான நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது, அதன் படி மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதி செய்ய வேண்டும். மேலும் பேரணியில் பங்கேற்பவர்கள் 500 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். பேரணியின்போது, சாதி, மதம் சார்ந்து பேசவோ, பாடல்கள் பாடவோ கூடாது. மேலும் பேரணியின் போதும், கூட்டம் நடக்கும் போதும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை, போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்