சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள் - சூடுபிடிக்கும் தீபாவளி விற்பனை
|சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், தீவுத்திடலில் தற்போது பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இறுதிகட்ட பண்டிகைக்கால விற்பனை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஜவுளிக்கடைகள், பலசரக்குக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. குறிப்பாக பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.
அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், அங்கு தற்போது பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
இந்த ஆண்டு சந்தைக்கு வந்துள்ள பல்வேறு புதிய வகை பட்டாசுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல் பட்டாசு பாக்ஸ்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பட்டாசு பாக்ஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு மட்டும் புதிதாக ஆயிரம் வகையான பட்டாசுகள் வந்துள்ளதாகவும், 100 சதவீதம் பசுமை பட்டாசுகள் மட்டுமே அங்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை பட்டாசு விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.