< Back
மாநில செய்திகள்
கர்நாடக எல்லையில் பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு - 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்
மாநில செய்திகள்

கர்நாடக எல்லையில் பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு - 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

தினத்தந்தி
|
7 Oct 2023 9:22 PM IST

கர்நாடக எல்லையில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஓசூர்,

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. அவர் இந்த கடையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது. இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடைக்குள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. மேலும் பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்