பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
|பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில், காமராஜர்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அதே பகுதியில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை 10 மணி அளவில் தொழிலாளர்கள் வேலையை தொடங்கினர். இதில் ஒரு அறையில் பட்டாசு உற்பத்திக்கான மருந்து கலவை தயார் செய்தபோது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 2 அறைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தன. அதற்கு அருகில் இருந்த 2 அறைகளும் பலத்த சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் தீயணைப்பு படையினர் மற்றும் வச்சக்காரப்பட்டி போலீசார், சம்பவம் நடந்த ஆலைக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தரைமட்டமான 2 அறைகளில் பணியில் இருந்த கன்னிசேரிபுதூரைச் சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேதம் அடைந்த மற்ற 2 அறைகளில் இனாம்ரெட்டிபட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (18), தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (25) ஆகிய 2 பேரும் படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணகுமார் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் ஒண்டிப்புலியை சேர்ந்த முத்துக்குமார், ஆலை மேலாளர் கருப்பசாமி ஆகிய 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.