பட்டாசு ஆலை விபத்து: உடல் கருகிய 2 வாலிபர்கள் சாவு
|பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உடல் கருகிய வடமாநில வாலிபர்கள் 2 பேர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சாணான்குளத்தில் கீழச்செல்லையாபுரத்தை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 14-ந் தேதி, பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
2 பேர் பலி
அப்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்பால் ஆஜி (வயது 25), சந்தீப் குமார் (24), வினோத் ராம்பால் (25) ஆகிய 3 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். அவர்களை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சந்தீப் குமார், ராம்பால் ஆஜி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
வினோத் ராம்பால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.