நாமக்கல்
பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வெல்லம் தயாரிக்கும் ஆலைகள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி என 5 பேரூராட்சிகள் உள்ளன. இதே பகுதியில் உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும் உள்ளன. இந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 40 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் இரும்பு கம்பிகள், சிமெண்டு அட்டை தயார் செய்யும் தொழிற்சாலைகள், 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளும் உள்ளன.
பரமத்திவேலூரில் தாசில்தார் அலுவலகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், அரசு ஆஸ்பத்திரி, தனியார் கல்லூரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையங்களும் உள்ளன.
தீயணைப்பு நிலையம் வேண்டும்
மேலும் பிரசித்தி பெற்ற கோவில்களும், காவிரி நதியும், ஜேடர்பாளையத்தில் படுகை அணையில் பூங்காவுடன் கூடிய சுற்றுலா தலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பரமத்திவேலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படும் போதும், கால்நடைகள் அவ்வப்போது தவறி கிணறுகளில் விழும் சமயங்களிலும், காவிரி ஆற்றில் எதிர்பாராதவிதமாக மூழ்கியவர்களை காப்பாற்றவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களிலும், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்கவும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தர வேண்டிய நிலை உள்ளது.
எனவே பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் கோரிக்கை
இதுகுறித்து பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-
பரமத்திவேலூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை தடுக்கவும், வெள்ள அபாய காலங்களில் காவிரி ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றவும், ஜேடர்பாளையம் காவிரியாற்றின் தடுப்பணை பகுதியில் அடிக்கடி ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கவும் பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெள்ளத்தில் சிக்கியவர்கள்
பரமத்தியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம்:-
பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வெளியூரை சேர்ந்தவர்கள் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றனர்.
இதில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டுமானால் இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க பரமத்திவேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
அடிக்கடி தீ விபத்து
பொத்தனூரை சேர்ந்த குமார்:-
பரமத்திவேலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் நாமக்கல், திருச்செங்கோடு அல்லது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஏதாவது ஒரு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ விபத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதனை தடுக்க பரமத்திவேலூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.