கிருஷ்ணகிரி
உயிரிழப்பு, சேதங்களை தடுக்க காவேரிப்பட்டணத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|உயிரிழப்பு, சேதங்களை தடுக்க காவேரிப்பட்டணத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காவேரிப்பட்டணம்:
அடிக்கடி நடக்கும் தீ விபத்துகள், உயிர் இழப்புகளை தடுக்க கவேரிப்பட்டணம் நகரில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குட்டி சிவகாசி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியானது கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில அமைந்துள்ளது. காவேரிப்பட்டணத்தை குட்டி சிவகாசி என்று அந்த பகுதி மக்கள் குறிப்பிடுவார்கள். காவேரிப்பட்டணத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள், அரிசி அரவை கூடங்கள், மாம்பழ கூழ் தொழிற்சாலைகள், பால்கோவா தொழிற்சாலைகள், முறுக்கு, நிப்பட் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இத்தகைய காவேரிப்பட்டணத்தில் தொழிற்சாலைகளில் அவ்வப்போது தீ விபத்துகள் நடக்கின்றன. அதேபோல கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையிலும் அவ்வப்போது சாலை விபத்துகள் நடக்கின்றன. இது போன்ற நேரங்களில் காவேரிப்பட்டணத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், தீயணைப்பு மீட்பு படையினர் கிருஷ்ணகிரியில் இருந்தோ, பாலக்கோட்டில் இருந்தோ தான் வர வேண்டிய நிலை உள்ளது.
தீயணைப்பு நிலையம் தேவை
கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய காவேரிப்பட்டணத்திற்கும், அதே போல பாலக்கோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவேரிப்பட்டணத்திற்கோ தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஆகிறது. இதனால் விபத்தில் பெருத்த அளவில் சேதத்தை தொழில் நடத்துவோர் சந்திக்கிறார்கள்.
அதேபோல விபத்து கால கட்டங்களிலும் தீயணைப்பு மீட்பு துறையினர் தாமதமாக செல்வதால், விபத்துகளில் உயிர் இழப்புகள் நடந்த சம்பவங்களும் கடந்த காலத்தில் நடந்துள்ளன. காவேரிப்பட்டணத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் பெரிய அளவில் சேதத்தை அப்பகுதி மக்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே அங்கு தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
சேதங்களை தவிர்க்கலாம்
நாசர், மரவியாபாரி:- காவேரிப்பட்டணம் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரமாகும். இங்கு தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை செல்கின்றன. இங்கு அடிக்கடி தீ விபத்து, சாலை விபத்துகள் நடக்கின்றன. இது போன்ற நேரங்களில் தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஆவதால் உயிர் இழப்புகளும், பொருட்கள் சேதமும் ஏற்படுகின்றன. எனவே இங்கு தீயணைப்பு நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். தீயணைப்பு வாகனத்துடன், வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பொருட் சேதம், உயிர் சேதங்களை பெருமளவில் தவிர்க்கலாம்.
மணி, டீக்கடைக்காரர்:-
சமீபத்தில் காவேரிப்பட்டணத்தில் லாரி தீப்பிடித்த சம்பவம் நடந்தது. கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது. சற்று தாமதம் ஆகி இருந்தால் லாரி முழுமையாக தீப்பிடித்து பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும். இதேபோல அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இங்கு தீயணைப்பு வாகனம் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு வாகனத்துடன் தீயணைப்பு நிலையம் முதலில் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அரசுக்கு உரிய கருத்துருக்களை தயார் செய்து அனுப்பி, அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.