நெல்லை: சார்ஜ் ஏறி கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக்கில் பற்றிய தீ..!
|நெல்லை அருகே சார்ஜ் ஏறி கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர் (வயது 42). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக செல்வதற்கு எலக்ட்ரிக் பைக் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ச் ஏற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் பைக்கிலிருந்து தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதையடுத்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி முத்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பேட்டரி வண்டியின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.
தமிழகத்தில் ஆங்காங்கே எலக்ட்ரிக் பைக் எரிந்து வரும் நிலையில் இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.