< Back
மாநில செய்திகள்
கோவை வனப்பகுதியில் காட்டுத்தீ - விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைக்க வனத்துறை முடிவு
மாநில செய்திகள்

கோவை வனப்பகுதியில் காட்டுத்தீ - விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைக்க வனத்துறை முடிவு

தினத்தந்தி
|
16 April 2023 6:33 AM IST

காட்டுத்தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் பேரூர் அருகே ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் கடந்த 5 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வனப் பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரக பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டின் தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. பூ பூத்து காய்ந்த மூங்கில்கள் எரிந்துள்ளன. காட்டுத் தீ காரணமாக வன விலங்குகள் ஏதும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காட்டுத்தீயை காடுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமானப்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி இன்று காலை தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்