செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் கேபிள் வயரில் 'தீ' - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்
|கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்ற கேபிள் வயரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள மாடம்பாக்கம் கூடுவாஞ்சேரி பகுதியை இணைக்கும் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மேலே சென்ற தனியார் கேபிள் வயரில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பயங்கரமாக தீப்பொறி வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த கேபிள் வயர் மீது தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த மேம்பாலத்தின் கீழ் ரெயில்கள் செல்லும் தண்டவாளம் இருப்பதால் உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தீயணைப்பு அதிகாரி தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கேபிள் வயர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த சமயத்தில் மேம்பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தில் எந்த விதமான ரெயில்களும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து ரெயில்வே துறை சார்பில் சிக்னல் நிறுத்தி வைக்கப்பட்டு ரெயில்வே மேம்பாலத்திற்கு மேலே சென்ற தனியார் கேபிள் வயர் தீப்பற்றி எரிந்ததால் மேம்பாலத்திற்கு அடியில் செல்லும் ரெயில்வே மின்சார கம்பங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த தீவிபத்து காரணமாக நள்ளிரவில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.