கரூர்
2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்
|கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை 2-வது நாளாக அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அப்போது அப்பகுதியில் சாலை புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
பெரும் பிரச்சினை
ஒன்றுக்கும் உதவாத ஒன்றை `குப்பை' என்று அலட்சியமாக குறிப்பிட்டு, அதைக்கடந்து சென்றுவிடுகிறோம். `சிறு துளி பெரு வெள்ளம்' என்பது போல, கொஞ்சம் கொஞ்சமாய் சேரும் குப்பை மலைபோல குவிந்து, அதனால் ஏற்படும் பிரச்சினைகளின் வீரியம் மிக அதிகம். குப்பையை அகற்றாவிட்டாலும் தொல்லை, ஒரு இடத்திலிருந்து அகற்றி, வேறொரு இடத்துக்குக் கொண்டுசென்று கொட்டினாலும் தொந்தரவு என இருதலைக் கொள்ளி எறும்பாய் திகைக்கின்றன மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள். இதற்கிடையில், அவ்வப்போது குப்பைக் கிடங்குகளில் பற்றிக் கொள்ளும் தீ காரணமாக ஏற்படும் சுகாதார சீர்கேடு, காற்று மாசு என பாதிப்புகள் அதிகம். குறிப்பாய், தொழில் நகரங்கள் மிகுந்த கொங்கு மண்டலத்தில், குப்பைமேடு விவகாரம், பெரும் பிரச்சினையாகவே உள்ளது.
தீ விபத்து
அந்த வகையில் கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தற்போது ஆடி மாத காற்றின் வேகத்தால் தொடர்ந்து குப்பை கிடங்கில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கரூர்-வாங்கல் சாலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
2-வது நாளாக...
இந்நிலையில் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து குப்பை கிடங்கில் தீ எரிந்து கொண்டு இருந்தது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை கிளறியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 பொக்லைன் எந்திரங்கள், 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கரூர்-வாங்கல் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் நேற்றும் வாங்கல் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் புகை மண்டலத்துக்குள் புகுந்து வெளியே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டனர். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.