சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
|சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தீ தடுப்பு தணிக்கை நடைபெறும்.
இதன்படி ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் அங்கு முறையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, தீயணைப்பான்கள், தண்ணீர் வசதிகள் உள்ளதா, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்த விழிப்புணர்வு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி தீ தடுப்பு தணிக்கை நடைபெறும்.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தீயணைப்பு துறை சார்பில் கடந்த மாதம் தொடங்கி பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தீ தடுப்பு தணிக்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையில் தீப்பற்றி எரிந்தால் அதை எவ்வாறு அணைப்பது, மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டன.
மேலும் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சென்னை ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையிலும் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.