< Back
மாநில செய்திகள்
பொன்னேரியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தினத்தந்தி
|
12 March 2023 2:24 PM IST

பொன்னேரி நகராட்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சாம்பலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி நகராட்சி பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் திருவேங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும், அதே பகுதியில் கோகுல தெருவை சேர்ந்த இதயகுமார் (62) என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நேதாஜி நகரில் வசிக்கும் ராமதாஸ் (60) டீக்கடையும் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் கடை முழுவதும் தீ பரவியதால் கடையில் பழுது பார்க்க வைத்திருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சாம்பலானது.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள பேன்சி கடைக்கும் தீ பரவியதால் கடையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு வகையான பேன்சி பொருட்கள் சாம்பலானது. இதனை அடுத்து டீக்கடைக்கு தீ பரவிய நிலையில் சேதமானது.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்