< Back
மாநில செய்திகள்
வேலூர்: தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
மாநில செய்திகள்

வேலூர்: தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

தினத்தந்தி
|
6 Jun 2022 6:27 AM IST

வேலூரில் தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

வேலூர்:

வேலூர் அண்ணாசாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தின் எதிரே 3 மாடி கட்டிடங்கள் கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதன் தரை மற்றும் முதல் தளத்தில் ஜவுளிக்கடையும், 2-ம் தளத்தில் கல்வி நிறுவனமும், மூன்றாம் தளத்தில் 2 தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அலுவலகத்தில் யாரும் இல்லை.

இந்த நிலையில் காப்பீட்டு நிறுவன அலுவலகம் ஒன்றில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து அலுவலக பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வணிக வளாகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீயின் வெப்பம் தாங்காமல் கண்ணாடிகள் வெடித்து சிதறின. அதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து காப்பீட்டு நிறுவன ஊழியர்களிடம் வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்