< Back
மாநில செய்திகள்
மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவில் வாசலில் தீ: 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவில் வாசலில் தீ: 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
8 Feb 2024 8:42 AM IST

மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற கபாலீசுவரர் கோவில் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்தனர். அதிர்ஷ்டவசமாக கோவிலின் கதவு சேதம் அடையவில்லை. கோவிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் கோவிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற சமயம் கோவில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும், கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோவிலின் பாதுகாப்புகள் குறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையடுத்து கோவில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில் மர்ம நபர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்