சென்னை
வியாசர்பாடியில் அங்கன்வாடி மையத்தில் கியாஸ் கசிவால் தீ விபத்து; பெண் ஊழியர் படுகாயம்
|வியாசர்பாடியில் அங்கன்வாடி மையத்தில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
சென்னை வியாசர்பாடி ராமசாமி தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மனைவி ராணி (வயது 58). இவர். வியாசர்பாடி புதுநகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
நேற்று அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்வதற்காக ராணி கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென குப்பென்று தீப்பிடித்தது. இதில் ராணியின் புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறிய அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் அவரது இடது கை, கால், தலை, வலது பக்க கன்னம் ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கியாஸ் சிலிண்டரில் உள்ள குழாயை எலி கடித்து விட்டதால் கியாஸ் கசிந்து அந்த அறை முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் ராணி அடுப்பை பற்ற வைத்தபோது அவரது உடலில் தீப்பிடித்தது தெரிந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.