'மிக்ஜம்' புயலை எதிர்கொள்ள தயார்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்..!!
|மூன்று மாவட்ட காவல் அலுவலர்கள் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை உள்ளனர்
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புயலாக வலுவடைய இருக்கிறது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை மியான்மர் நாடு பரிந்துரைத்து இருக்கிறது.
தற்போது அது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 420 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 540 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவிலும் புயல் சின்னம் நிலை் கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) நிலவக்கூடும். அதன்பின்னர், கடலோர பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடற்கரையை நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) காலை அடைந்து, நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதலில் சென்னை மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடல் பகுதிகளில் இருக்கும் புறக்காரணிகளால் புயல் திசை மாறி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கடக்க இருக்கிறது. புயல் கரையை கடந்த பிறகு, 6-ந் தேதி (புதன்கிழமை) விசாகப்பட்டினத்துக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் புயல் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகளை நெருங்கி செல்வதால் இன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும், நாளை திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 50 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 4-ந் தேதி (நாளை) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் திசை மாறியதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல், கனமழை எச்சரிக்கையையொட்டி விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பொது சுகாதாரத்துறையும் மருத்துவ வசதிகளை செய்துள்ளது.
இந்நிலையில் மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு துறையினர் ஆயத்தநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மூன்று மாவட்ட காவல் அலுவலர்கள் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பயன்படுத்தப்படும் பிரத்தியோக உபகரணங்கள் பைபர் போட்டிகள் மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.