< Back
மாநில செய்திகள்
குன்றத்தூரில் பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து; உயிர் தப்பிய ஊழியர்கள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூரில் பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து; உயிர் தப்பிய ஊழியர்கள்

தினத்தந்தி
|
5 Sept 2023 3:53 PM IST

குன்றத்தூரில் பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் உயிர் தப்பினர்.

குடோனில் தீ விபத்து

குன்றத்தூரை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது 36). இவர் குன்றத்தூர், மேத்தா நகர் 10-வது தெருவில் மெத்தைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனிக்குள் மெத்தைகள் தயாரிக்க பயன்படும் பஞ்சுகளை வைத்திருந்த நிலையில் நேற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது குடோனில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை கண்டு ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மள, மளவென பரவியதால் செய்வது அறியாமல் ஊழியர்கள் அங்கிருந்து வெளியே ஓடி வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மின் கசிவால்...

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஞ்சு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் குடோனில் இருந்த பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பபட்டதாக கூறப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த பஞ்சு மெத்தை குடோனில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவம் குடியிருப்பு வாசிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்