சென்னை
அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
|அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை அண்ணாநகர், 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 தளங்களில் 8 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் 4-வது தளத்தில் உள்ள வீட்டில் ஈஷா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் ஹாலில் உள்ள 'சுவிட்ச் போர்டில்' திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அதற்குள் வீடு முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் ஈஷா குடும்பத்தினர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்ற வீடுகளில் வசித்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து விட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் ஈஷா வீட்டின் ஹாலில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.