திருவள்ளூர்
கியாஸ் கசிவால் தீ விபத்து: படுகாயம் அடைந்த மூதாட்டி சாவு
|பள்ளிப்பட்டு தாலுகா அருகே கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் சானூர்மல்லாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (35). இவர்களுக்கு பிரியங்கா (2½), கீர்த்தனா (1½) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 17-ந்தேதி ஏழுமலை வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி பரிமளா ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஏழுமலையின் தாயார் தனம்மாள் (60), குழந்தைகள் பிரியங்கா, கீர்த்தனா ஆகியோர் மட்டும் இருந்தனர்.
மதியம் சமையல் செய்வதற்காக தனம்மாள் சமையலறைக்கு சென்றார். அப்போது குழந்தைகள் இருவரும் அவருடன் இருந்தனர். அறை முழுவதும் கியாஸ் கசிந்து பரவியிருந்தது. இதை அறியாத தனம்மாள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். இதில் அந்த அறை முழுவதும் தீப்பிடித்தது. அறையில் இருந்த தனம்மாள், குழந்தைகள் பிரியங்கா, கீர்த்தனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரியங்கா ஏற்கனவே இறந்துவிட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். குழந்தை கீர்த்தனா மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.