< Back
மாநில செய்திகள்
வேளாங்கண்ணியில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேளாங்கண்ணியில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்

தினத்தந்தி
|
9 Sept 2023 12:45 AM IST

பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் நடந்த ஆய்வின்போது குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன 8 கிலோ மீன், 14 கிலோ கோழிக்கறி கைப்பற்றி அழிக்கப்பட்டது.

பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் நடந்த ஆய்வின்போது குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன 8 கிலோ மீன், 14 கிலோ கோழிக்கறி கைப்பற்றி அழிக்கப்பட்டது.

இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உணவின் தரம் ஆய்வு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்ட 6 குழுவினர் ஓட்டல்கள், கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.

நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் நாள்தோறும் 25 முதல் 50 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சாப்பிட தகுதி இல்லாத உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மீன்- கோழிக்கறி அழிப்பு

மொத்தம் 224 உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 22 உணவு மாதிரிகள் தரமற்றதாக கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கெட்டுப்போன நிலையில் இருந்த 8 கிலோ மீன், 14 கிலோ கோழிக்கறி, 7.5 கிலோ நொறுக்குத்தீனி, 12 கிலோ சப்பாத்தி மாவு, 8 கிலோ காய்கறிகள், 13 லிட்டர் பால், 25 லிட்டர் குளிர்பானங்கள், 100 பாக்கெட் பஞ்சுமிட்டாய் ஆகியவை கைப்பற்றப்பட்டு, வியாபாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

ரூ.5 ஆயிரம் அபராதம்

தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்