< Back
மாநில செய்திகள்
வீட்டுக்குள் தாய், குழந்தைகளை வைத்து பூட்டி சீல் வைத்த நிதிநிறுவன அதிகாரிகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வீட்டுக்குள் தாய், குழந்தைகளை வைத்து பூட்டி 'சீல்' வைத்த நிதிநிறுவன அதிகாரிகள்

தினத்தந்தி
|
25 Jun 2023 12:15 AM IST

தக்கலையில் கடனை செலுத்ததால் வீட்டை ஜப்தி செய்த போது தாய், 2 குழந்தைகளை பூட்டி ‘சீல்’ வைத்த தனியார் நிதிநிறுவன அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்டனர்.

தக்கலை,

தக்கலையில் கடனை செலுத்ததால் வீட்டை ஜப்தி செய்த போது தாய், 2 குழந்தைகளை பூட்டி 'சீல்' வைத்த தனியார் நிதிநிறுவன அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை மீட்டனர்.

வீட்டை அடகு வைத்து கடன்

தக்கலை ராமன்பறம்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது50). தக்கலை பஸ் நிலையத்தில் கடை நடத்தி வருகிறார். இவரது வீடு 3 மாடிகளை கொண்டது. வீட்டின் முதல் 2 தளங்களில் ஸ்ரீகுமார் தனது தாயார், மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். 3-வது தளத்தில் ஸ்ரீகுமாரின் சகோதரி நீலாவதி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஸ்ரீகுமார் தனது தொழில் ேதவைக்காக வீட்டை அடமானமாக வைத்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றிருந்தார். கடன்தொகையை ஒழுங்காக செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் இவர் மீது நிதிநிறுவனம் சார்பில் நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அடமானம் வைத்த வீட்டை ஜப்தி செய்ய உத்தர விட்டது.

ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்

இதனையடுத்து நேற்று காலையில் கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்ட ஆணையர் வித்யா சுபஸ்ரீ மற்றும் தனியார் நிதிநிறுவன அதிகாரிகள், வக்கீல் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டை ஜப்தி செய்வதற்காக வந்தனர். அப்போது வீட்டில் ஸ்ரீகுமார் இல்லாத நிலையில் அவருைடய தாய் மற்றும் மனைவி இருந்தனர். அவர்களை அதிகாரிகள் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி 'சீல்' வைத்து விட்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி வீட்டில் 3-வது தளத்தில் இருந்த ஸ்ரீகுமாரின் சகோதரி மற்றும் அவரது மகள், மகன் ஆகியோருக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கடந்து கீழே இறங்கி வந்த போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அலுவலர் ஜீவன்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் வெளிபுறம் உள்ள படிகட்டு வழியாக மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

கதவை திறந்து மீட்டனர்

இந்த நிலையில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களோடு நிதிநிறுவன அதிகாரிகளும், கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்ட ஆணையரும் வந்தனர்.

அப்போது போலீசார் நிதிநிறுவன அதிகாரிகளிடம் 'கோர்ட்டு உத்தரவு இருந்தாலும் வீட்டிலுள்ள ஆட்களை வெளியே அனுப்புவதற்கு முன் அவர்களின் உடமைகளை எடுத்து செல்ல அவகாசம் கொடுக்க வேண்டும். வீட்டின் உள்ளே ஆட்கள் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகே வீட்டை பூட்டி 'சீல்' வைக்க வேண்டும்' என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் கதவை திறந்து வீட்டின் உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்