தேனி
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை
|கம்பத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் நிதிநிறுவன அதிபர் படுகொலை செய்யப்பட்டார். முல்லைப்பெரியாற்றில் உடலை வீசிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிதி நிறுவன ஊழியர்
தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 21-ந்தேதி பணிக்கு சென்ற இவர், இரவில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் தேடியும் பிரகாஷ் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில், அவருடைய மனைவி கனிமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை தேடி வந்தனர். மேலும் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் (34) மனைவி நித்யா (25) என்பவரிடம் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நித்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனக்கும், பிரகாசுக்கும் கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவர் வினோத்குமார், பிரகாசை கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நித்யா, கம்பம் என்.கே.பி கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மனைவியுடன் உல்லாசம்
கைதான வினோத்குமார் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நிதி நிறுவனத்தில் வேலை செய்த பிரகாசிடம், என்னுடைய மனைவி நித்யா கடன் வாங்கினார். இதனால் அவருக்கும், என்னுடைய மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
அதேநேரத்தில் நானும், பிரகாசும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிப்பது வழக்கம். போதை ஏறியதும் வீட்டுக்கு வந்து நான் உறங்கி விடுவேன். நான் தூங்கியவுடன் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து நித்யாவுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
ஒரு நாள் அவர்கள் 2 பேரும் உல்லாசம் அனுபவித்ததை பிரகாஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை என்னுடைய மனைவியின் செல்போனுக்கு அவர் அனுப்பினார். அதனை நான் பார்த்து விட்டேன். இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.
குடிப்பதைபோல நடித்து...
இது தொடர்பாக என்னுடைய மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்தேன். இதனையடுத்து எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருப்பினும் அவர்களுக்கிடையான கள்ளத்தொடர்பு நீடித்தது. இது, எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. எனவே பிரகாசை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 21-ந்தேதி பிரகாசும், நானும் ஒன்றாக மது குடிக்க சென்றோம். எனக்கு அவர், மதுபானத்தை அதிகமாக ஊற்றிக்கொடுத்தார். ஆனால் அவருடைய கவனத்தை திசை திருப்பி, நான் மதுபானத்தை தரையில் ஊற்றி விட்டேன்.
அதேநேரத்தில், மதுபானம் குடித்து போதை ஏறியதை போல நடித்தேன். சிறிது நேரத்தில் நான் வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டின் ஒரு அறையில் தூங்குவதை போல நடித்தேன்.
கழுத்தை இறுக்கி கொன்றேன்
அப்போது நித்யாவின் செல்போன் எண்ணுக்கு, நான் வீட்டுக்கு வரட்டுமா? என குறுந்தகவல் அனுப்பினார். அதற்கு நித்யா, வீட்டுக்கு வருமாறு குறுந்தகவல் அனுப்பினார். பிரகாசை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன்.
சிறிதுநேரத்தில் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த நான் வைத்திருந்த கயிற்றால்,பிரகாசின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். அதன்பிறகு அவரது உடலை முல்லைப்பெரியாற்றில் வீச முடிவு செய்தேன்.
இதற்காக என்னுடைய நண்பரும், கம்பம் என்.கே.பி.கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான ரமேஷ் (31) என்பவரின் உதவியை நாடினேன். அவரும் வீட்டுக்கு வந்தார். அவரிடம் நடந்த விவரத்தை கூறினேன்.
முல்லைப்பெரியாற்றில் உடல் வீச்சு
இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை, ஆட்டோவில் ஏற்றி விட்டு ரமேஷ் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், நித்யாவும் பிரகாஷ் உடலுடன் சின்னமனூர் நோக்கி சென்றோம்.
பின்னர் உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டோம். அதன்பிறகு எதுவும் தெரியாதது போல் இருந்தோம். ஆனால் போலீசார் துப்புத்துலக்கி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வினோத்குமார் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசாா் தெரிவித்தனர்.
இதற்கிடையே முல்லைப்பெரியாற்றில் பிரகாசின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நிதிநிறுவன ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.