சிவகங்கை
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி-3 பேர் மீது வழக்கு
|பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி பணமோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி
காரைக்குடி காந்தி திடல் பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 35). ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை இவரது உறவினர். இவர் முத்துராமனிடம் தான் பங்கு வர்த்தகத்தில் இடைத்தரகராக உள்ளதாகவும் அதில் முத்துராமன் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் நம்பிக்கையூட்டியுள்ளார். அதனை நம்பிய முத்துராமன் பல தடவையாக அண்ணாமலையின் வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 59 ஆயிரத்து 150-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின் அண்ணாமலை லாபம் என்று கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை முத்துராமனின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு அண்ணாமலை முத்துராமனுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை. இது குறித்து முத்துராமன் கேட்டபோது அண்ணாமலை முத்துராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து முத்துராமன் காரைக்குடி நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் நம்பிக்கை மோசடி செய்ததாக ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை, மலையன், சாந்தி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.