< Back
மாநில செய்திகள்
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி: ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
4 March 2024 12:06 AM IST

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாயை இழக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்துக்கு நடப்பு கல்வி ஆண்டு செலவினத்துக்காக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அனுமதி அளித்து அந்த நிதி, அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகையாக செலுத்தப்படுகிறது.

அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை மாணவ-மாணவிகளின் கல்வி செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்கண்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டில் (2023-2024) நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவினத்தொகை ரூ.4 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரத்தை அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்துக்கு பெற்று வழங்க அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்