ராமநாதபுரம்
விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி
|நயினார்கோவில் பகுதியில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.
நயினார்கோவில்,
நயினார்கோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் வழங்கப்படுகிறது. பருத்தியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க எக்டேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், இதர பயிர்களில் தெளிப்பான்கள் அமைக்க ரூ.20 ஆயிரம், மழைத் துவான்கள் அமைக்க ரூ.36,176 மானியம் ஒரு எக்டருக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கடலை, பருத்தி, சிறுதானியங்கள், மிளகாய், தென்னை மற்றும் பழ மர பயிர்களுக்கு மானியம் பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் நிலத்தில் போர்வெல் திறந்தவெளிகிணறுகள், பண்ணை குட்டைகள் போன்ற பாசன ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களின் பட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலரிடம் கொடுத்து பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் கே.வி.பானு பிரகாஷ் தெரிவித்தார்.