கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
|கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கர்நாடகா மாநிலம் சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தமிழக லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.