< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

திருப்பத்தூர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Sept 2023 3:10 PM IST

திருப்பத்தூர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8-9-2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இதில் பயணித்த பயணிகள் நிறுத்தப்பட்ட வாகனத்தின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த செல்வி (எ) சேட்டம்மாள், க/பெ.பழனி (வயது 55), மீரா, க/பெ.முனுசாமி (வயது 51), தேவகி, க/பெ.சண்முகம் (வயது 50), கலாவதி, க/பெ.குப்புசாமி (வயது 50), சாவித்ரி, க/பெ.குப்பன் (வயது 42), கீதாஞ்சலி, க/பெ.ரஞ்சித் (வயது 35) மற்றும் தெய்வானை, க/பெ.திலிப்குமார் (வயது 32) ஆகிய ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்