மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|திருநெல்வேலி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அயன்சிங்கம்பட்டி கிராமம், மடத்துத் தெரு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, த/பெ.துரைசாமி (வயது 55) மற்றும் பேரின்பராஜா, த/பெ.பேச்சிமுத்து (வயது 28) ஆகிய இருவரும் நேற்று (28-10-2023) இரவு ஜமீன்சிங்கப்பட்டியிலுள்ள தங்களது வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்காலில் இறங்கி மடையைத் திறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக விலங்குகள் வருவதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வலையில் சிக்கி மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.