சென்னை
பைனான்ஸ் நிறுவன ஊழியர் கொலை: உடலை தீ வைத்து எரித்த துணை நடிகர் உள்பட 4 பேர் கைது
|சினிமா பைனான்ஸ் நிறுவன ஊழியரை கொன்று உடலை தீ வைத்து எரித்த வழக்கில் சினிமா பைனான்சியர், துணை நடிகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நொளம்பூர், எஸ்.அண்ட்.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் என்ற சோட்டா வெங்கட் (வயது 48). இவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதன் மூலம் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவரிடம் சிலர் பணம் வசூல் செய்யும் முகவராக வேலை செய்து வந்தனர். வெங்கட்ராமனிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த பணத்தை பெற்று கொடுப்பது இவர்களின் வேலை. அதன்படி பாபுஜி(50) என்பவரும் இவரிடம் பணம் வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பாபுஜி வசூலித்த பணத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வெங்கட்ராமனிடம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. அத்துடன் வெங்கட்ராமன் மகளின் 5 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் திருடிச்சென்று விட்டார். மேலும் வெங்கட்ராமன் குறித்து பலரிடம் அவதூறாக கூறி வந்தார்.
இதற்கிடையில் வெங்கட்ராமனிடம் இருந்து பணியில் நின்றுவிட்டு அவருடைய நண்பரான மற்றொரு சினிமா பைனான்சியர் கோபால் (35) என்பவரிடம் பாபுஜி வேலைக்கு சேர்ந்தார். அங்கும் பாபுஜி பண மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதனால் வெங்கட்ராமன், கோபால் இருவரும் பாபுஜியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு நண்பரான புரசைவாக்கத்தை சேர்ந்த கோபி என்ற நவீன் (47) என்பவர் மூலமாக பாபுஜியை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வரவழைத்தனர். அதன்படி கோயம்பேடு வந்த பாபுஜியை அங்கு பதுங்கி இருந்த வெங்கட்ராமன், நவீன் (47) மற்றும் மதுரவாயலை சேர்ந்த சரவணன் என்ற கணபதி (29), திலீப் (30) ஆகியோர் காரில் கடத்திச்சென்றனர். பின்னர் வெங்கட்ராமன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து மோசடி செய்த நகை, பணம் குறித்து கேட்டு பாபுஜியை இரும்பு கம்பியால் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.
தன்னை குறித்து அவதூறாக பேசிய ஆத்திரத்தில் வெங்கட்ராமனும் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பாபுஜி பரிதாபமாக இறந்தார். பின்னர் பாபுஜி உடலை காரில் ஏற்றிச்சென்று போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் விமான நிலையம் பின்பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
இதற்கிடையில் வெங்கட்ராமன், தன்னிடம் வேலை செய்தபோது பணம் மோசடி செய்த பாபுஜியை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை கொளப்பாக்கம் பகுதியில் எரித்து விட்டதாக கூறி நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் கோயம்பேடு போலீசார், மாங்காடு போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் கிடந்த பாபுஜியின் உடலை மீட்டு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராமன், நவீன், சரவணன், திலீப் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
நகை, பணம் கையாடல் செய்ததற்காக பாபுஜியை கடத்திச்சென்று அடித்துக்கொலை செய்து உடலை எரித்தார்களா? அல்லது இந்த கொலைக்கு பெண் விவகாரம் காரணமா? என்ற கோணத்திலும் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலில் இந்த வழக்கை நொளம்பூர் போலீசார் விசாரித்தனர். ஆனால் பாபுஜி கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டு வருவதால் இந்த வழக்கு கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
கைதான சரவணன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. நவீன், சினிமாவில் துணை நடிகராக உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு சினிமா பைனான்சியரான கோபால் என்பவரையும் கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.
கொலையான பாபுஜி தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். ஆனால் அவர் எந்த பகுதியில் வசித்து வந்தார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவரது உறவினர்கள் எங்கு உள்ளார்கள்? என்பதும் தெரியவில்லை.
இதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை யாரிடம் ஒப்படைப்பது? என்பது தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து பாபுஜியை அடித்து கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.