< Back
மாநில செய்திகள்
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 28-ந்தேதி இறுதி விசாரணை
மாநில செய்திகள்

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 28-ந்தேதி இறுதி விசாரணை

தினத்தந்தி
|
12 Jun 2024 5:53 PM IST

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை 28-ந்தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

சென்னை,

நடிகர் விஷால் தனது 'விஷால் பிலிம் பேக்டரி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்திற்காக பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் லைகா நிறுவனத்திற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம், சமரசத்திற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் விஷால் முன்னெடுக்கவில்லை என லைகா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையில் 'ரத்னம்' படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2.60 கோடியை படத்தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்' கோர்ட்டில் செலுத்தியதையடுத்து அந்த நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள்