சென்னை
ஓட்டேரியில் சினிமா சண்டை கலைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை
|ஓட்டேரியில் வீட்டில் சினிமா சண்டை கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ரீனா (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தூங்கப்போவதாக கூறிவிட்டு படுக்கையறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.
இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அரவிந்தனின் தந்தை அசோக் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியாகி கிடந்த அரவிந்தன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.