தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது வேட்பு மனு தாக்கல்
|தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.வேட்பு மனு தாக்கல்
மத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று மனு தாக்கல் செய்கிறார். தென்சென்னை தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் நேற்று வரை 22 பேர் மனு அளித்துள்ளனர்.
கடலூர் தொகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் உள்பட 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் உள்பட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் சதீஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டார். அவரது பெயர் கொண்ட 5 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் சண்முகம் என்ற பெயரில் 6 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோட்டில் நேற்று 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான இன்று இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பொதுவாக கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பிரதான கட்சியைச் சேர்ந்த பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை.
கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அவ்வாறு டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின்பு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.