< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்; 2 பேர் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்; 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
2 July 2023 10:19 AM IST

புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா வழக்கில் கைதான சென்னையை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த சிரில்ராஜ்(வயது 26), கொலை முயற்சி வழக்கில் வேளச்சேரி போலீசாரால் கைதான பெரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்(22) மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நாகராஜ், யுவராஜ், ஜான், வினோத், தீனா ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் 7 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து கேரம் போர்டு விளையாடினர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. கைதிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் கைகளாலும், கட்டையாலும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் சிரில்ராஜ் மற்றும் சதீஷ் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறை போலீசார், மோதலில் ஈடுபட்ட கைதிகளை தடுத்து நிறுத்தி சமரசம் செய்து வைத்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த 2 கைதிகளையும் மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த மோதல் குறித்து சிறை தரப்பில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மோதலில் ஈடுபட்ட கைதிகள் நாகராஜ், யுவராஜ், ஜான், வினோத், தீனா ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். புழல் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்