< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் கவனமுடன் களப்பணி ஆற்ற வேண்டும்
சேலம்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் கவனமுடன் களப்பணி ஆற்ற வேண்டும்

தினத்தந்தி
|
26 Nov 2022 8:00 PM GMT

ஆத்தூர்:-

நாடாளுமன்ற தேர்தலில் கவனமுடன் களப்பணி ஆற்ற வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியினருக்கு கே.என்.நேரு அறிவுரை கூறினார்.

தி.மு.க. கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும், சேலம் மாவட்ட பொறுப்பாளருமான அமைச்சர் ேக.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்து வீரபாண்டியார் மாவட்டமாக உள்ளது. வீரபாண்டியார் மாவட்டம் என்றால் ஒற்றுமையாக கட்சி பணியாற்றுவதில் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. அவரிடத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் நீங்கள். உங்களுக்கு எதையும் சொல்லி கொடுக்க வேண்டியது இல்லை.

களப்பணி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளை கட்சியினர் சிறப்பாக செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். நமக்கு களத்தில் எதிரிகள் இல்லைதான். ஆனாலும் கவனமுடன் களப்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. (சேலம் மத்திய மாவட்டம்), உதயசூரியன் எம்.எல்.ஏ. (கள்ளக்குறிச்சி வடக்கு), வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. (கள்ளக்குறிச்சி தெற்கு), எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கவுதமசிகாமணி, மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீராம், கருணாநிதி, சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் செழியன் (ஆத்தூர்), விஜயகுமார் (அயோத்தியாபட்டணம்), மணி (தலைவாசல்), சித்தார்த்தன் (கெங்கவல்லி), தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்