< Back
மாநில செய்திகள்
126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்
கடலூர்
மாநில செய்திகள்

126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:11 AM IST

கடலூர் மாவட்டத்தில் 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

காய்ச்சல் தடுப்பு முகாம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1,000 காய்ச்சல் தடு்ப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களில் உள்ள 52 நடமாடும் மருத்துவ குழுவினரும், 1,450 சுகாதாரத்துறை ஊழியர்களும், 727 கொசுப்புழு தடுப்பு பணியாளர்களும். 1000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்களும் இம்முகாமில் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

25 நடமாடும் வாகனங்கள்

முன்னதாக கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சையாங்குப்பம் கிராமத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தும் 25 நடமாடும் மருத்துவ வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் இடம்பெற்றிருந்த மருத்துவ சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, ஆய்வகம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் காய்ச்சல் மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் டெங்குவை பரப்பும் கொசுவின் உற்பத்தியை கட்டுப்படுத்த தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரம்) கீதாராணி, மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

5,781 பேருக்கு சிகிச்சை

காலை முதல் மாலை வரை நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 781 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இன்று(திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் 86 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்