விருதுநகர்
விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன
|விருதுநகர் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் மேகநாத ரெட்டி விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் கான்சாபுரம் கிராமத்தில் நேரடி கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். மேலும் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செயய வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் நடத்தப்பட்ட விற்பனையாளர் கருத்தரங்கில் 12 கொள்முதல் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
இடுபொருள்கள்
மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்திற்கு தேவையான 2,610 டன் உர தேவைக்கு 2,230 டன் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் மற்றும் தனியார் விற்பனைநிறுவனங்கள் மூலம் 2,942 டன் இருப்பில் உள்ளது. மக்காச்சோள விதைகள் மற்றும் காய்கறி விதைகள் இருப்பில் உள்ளதால் விவசாயிகள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட விவசாய சங்கங்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட சங்க விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.