தஞ்சாவூர்
விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்
|குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.
மதுக்கூர்:
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சிறப்பு தொகுப்பு
மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 460 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடி விதைப்பாகவும், திருந்திய நெல் சாகுபடி முறையிலும் மற்றும் வரிசை நடவு முறையிலும் சாகுபடி செய்துள்ளனர்.
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் அடையும் வகையில் தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி. உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரம் அடங்கிய உரத்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
100 சதவீத மானியத்தில் உரம்
குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனடைய விவசாயிகள் நிலத்தின் அடங்கல். குறுவை சாகுபடி செய்துள்ள வயலில் லேட்லாக்குடன் ஒரு புகைப்படம் எடுத்து உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். அல்லது நேரடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள குறுவை சிறப்பு சேவை மையத்தில் தங்களுடைய ஆதார் எண், அடங்கல் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் அந்தந்த வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வேளாண் உதவி இயக்குனர் அனுமதி படிவத்துடன் சென்று 100 சதவீத மானியத்தில் உரத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.