< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு வழங்க 765 டன் உரம் வருகை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு வழங்க 765 டன் உரம் வருகை

தினத்தந்தி
|
13 Oct 2022 10:24 PM IST

விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 765 டன் யூரியா உரம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.


விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 765 டன் யூரியா உரம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சாகுபடி

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 1 லட்சத்து 20 ஆயிரம் எக்ேடரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடி செய்து உள்ளனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைக்க அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பயிர்கடன் மற்றும் உரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக அக்டோபர் மாத உரம் ஒதுக்கீடு 4 ஆயிரத்து 400 டன் ஆகும். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்த ஒதுக்கீட்டில் தற்போது 765 டன் கிரிப்கோ யூரியா உரம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ரெயில் மூலம் ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுவரை ஆயிரத்து 900 டன் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், 3 ஆயிரம் டன் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி பயன்பெறலாம். தற்போது மாவட்டத்தில் யூரியா 2613 டன், டி.ஏபி. 1908 டன், பொட்டாஷ் 103 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 956 டன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

விலைபட்டியல்

நடப்பு சம்பா பருவத்திற்கு தேவைப்படும் உரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள் வாங்கும் போது தங்களுடைய நில ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளை கொடுத்து விற்பனை நிலையத்தின் மூலமாக உரிய பில்களை பெற்று உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

உர விற்பனையாளர்கள் உர விலைப்பட்டியல் அறிவிப்பு பலகையை வைத்திருக்க வேண்டும். அனைத்து சில்லரை உர விற்பனையாளர்களும் ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமான உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

உரிமம் ரத்து

விலைப்பட்டியல் உர இருப்பு விவரம் விவசாயிகளுக்கு தெரியும்படி கடையில் வைத்திருக்க வேண்டும். விதிகளை மீறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், இதுதொடர்பாக வேளாண் துறையினர் பார்த்திபனூர், அபிராமம் மற்றும் கமுதி பகுதிகளில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களில் உர விற்பனை, இருப்பு மற்றும் விலைப்பட்டியல் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்