ராமநாதபுரம்
சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்
|நெல் பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
நெல் பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
பரவலாக மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி மாத தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மழையை பயன்படுத்தி வயல்களை உழவு செய்து விதைப்பதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த நிலையில் அடி உரமாக பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டி.ஏ.பி. உரத்தை அடி உரமாக பயன்படுத்து கிறார்கள். டி.ஏ.பி. உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சூப்பர் பாஸ்பேட்
மத்திய அரசின் உரத்துறை டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம் என்று மத்தியஅரசு வலியுறுத்தி உள்ளது. 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 20 கிலோ யூரியா அல்லது 50 கிலோ கூட்டு உரம் காம்ப்ளக்ஸ், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் அல்லது 50 கிலோ அல்லது கூட்டு உரம் காம்ப்ளக்ஸ், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.
பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவையானது கந்தகச்சத்து. கூட்டு உரத்தில் 13 சதவீதம் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதவீதம் கந்தகச்சத்து உள்ளதால் பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.
நல்ல மகசூல்
தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளக்ஸ் உரம் 1520 டன், டி.ஏ.பி. 590 டன், யூரியா 1420 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூறியுள்ளதை விவசாயிகள் பின்பற்றி நெற்பயிரில் இந்த சம்பா பருவத்தில் இதனை நடைமுறைபடுத்தி நல்ல மகசூல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.