தூத்துக்குடி
5-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
|தூத்துக்குடியில் 5-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதே போன்று தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதன்படி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர்.