< Back
மாநில செய்திகள்
சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
நீலகிரி
மாநில செய்திகள்

சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

தினத்தந்தி
|
5 Aug 2023 4:15 AM IST

கோத்தகிரி அருகே சாலையோரம் உள்ள சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மரங்கள் பட்டு போகும் அபாயம் உள்ளது. எனவே, பணியை தடுத்த நிறுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே சாலையோரம் உள்ள சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மரங்கள் பட்டு போகும் அபாயம் உள்ளது. எனவே, பணியை தடுத்த நிறுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சோலை மரங்கள்

கோத்தகிரியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடைகம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் வழியில் பனகம்பை, ஜக்கலோடை, கடைகம்பட்டி வரை பலர் தேயிலை தோட்டங்களை வாங்கி, செடிகளை பிடுங்கி அகற்றி விட்டு, சொகுசு பங்களாக்கள், தனியார் விடுதிகள் கட்டி உள்ளனர். இதற்கிடையே கடைகம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சோலை மரக்கன்றுகளான சம்பங்கி பூ மரக்கன்றுகள் வரிசையாக நடவு செய்யப்பட்டன.

இவை தற்போது நன்கு வளர்ந்து பச்சைப்பசேல் இலைகளுடனும், கொத்து கொத்தாக பூக்கள் பூத்து குலுங்கி வருகின்றன. அதில் இருந்து வெளியாகும் நறுமணம் அந்த வழியாக செல்பவர்களின் மனதை கவரும் வகையில் இருந்தது. ஆனால், தற்போது அங்கு விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டியவர்கள் சிலர் தங்களது கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி வருகின்றனர்.

தடுத்து நிறுத்த வேண்டும்

இதற்காக சாலையோரம் உள்ள சோலை மரங்களின் வேர்கள் பாதிக்கும் வகையில் குழி தோண்டி அஸ்திவாரம் அமைத்து வருகின்றனர். 3 இடங்களில் மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த மரங்கள் பட்டுப் போகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சோலை மரங்களையொட்டி சுற்றுச்சுவர் அமைப்பதால், மரங்களின் வேர்கள் செல்வது தடைபட்டு மரத்தை பட்டு போக செய்யக்கூடும். ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்