கடலூர்
குமராட்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் அண்ணன் புகார்
|குமராட்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளதாக அண்ணன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில்,
குழந்தை இல்லை
குமராட்சி அருகே கீழக்கரை கோப்பாடி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). இவர் திருச்செங்கோடு பகுதியில் தனியார் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் காட்டுமன்னார்கோவில் அருகே குப்பங்குழி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் புருஷோத்தமன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வேலையை விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் புருஷோத்தமன், நேற்று முன்தினம் கடன் வாங்கப்போவதாக தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ராஜேஸ்வரி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து அவருடைய அண்ணன் ராஜசேகரன்(35) குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.