< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
19 Oct 2023 12:35 AM IST

தர்மபுரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நல்லம்பள்ளி

காதல் திருமணம்

தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி அருகே நேரு நகரை சேர்ந்தவர் சக்திவேல், இவர் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிந்து (வயது 41). காதல் திருமணம் செய்த, இந்த தம்பதிகளுக்கு சவுமியா, ஸ்வேதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து சிந்து மட்டும் தர்மபுரிக்கு வந்து, தங்கி இருந்தார். இதனிடையே நேற்று முன்தினம் சிந்து வீட்டில் மின் விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார்.

போலீசார் விசாரணை

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த சிந்துவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த சிந்து, ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்