< Back
மாநில செய்திகள்
பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
10 Aug 2023 11:37 PM IST

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை மிரட்டல்

புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல் ரகுமான். இவர், கடந்த 2-ந் தேதி கணவன்-மணைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தனது கட்சிக்காரர் பெண் தரப்பிற்காக ஆஜரானார். அப்போது அந்த பெண்ணின் கணவரான சவேரியார்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் வக்கீல் கலீல்ரகுமான் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆரோக்கியராஜை கைது செய்யக்கோரி 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் போலீசார் தெரிவித்தபடி, ஆரோக்கியராஜை கைது செய்யவில்லை எனவும், அவரை உடனடியாக கைது செய்யவேண்டும். விசாரணை அதிகாரியான திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை (வயது 41) பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கூறியதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவை சந்தித்து மனு கொடுப்பதற்காக வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வக்கீல்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா வேறு போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று உறுதி அளித்ததின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

பணியிட மாற்றம்

அதைத்தொடர்ந்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் வக்கீல் கலீல் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜ் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்ததாகவும் தன் மீது வேண்டும் என்றே வக்கீல்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக சக போலீசாரிடம் சங்கீதா புலம்பி வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை மருத்துவ விடுப்பில் செல்வதாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு புதுக்கோட்ைட அருகே மேட்டுப்பட்டியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சங்கீதா வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், போலீஸ் வட்டாரத்திலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

எழுதி வைத்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கையில், தற்கொலைக்கு முயற்சி செய்து சம்பவம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய பொதுக்குறிப்பில், இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் தனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாகவும், உதவியாக இருந்ததாகவும், வக்கீல்கள் தொந்தரவால் தான் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளதாக கூறினர்.

புதுக்கோட்டையில் மன உளைச்சலால் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்