தேனி
பெண் பலி; 2 குழந்தைகள் காயம்
|கம்பத்தில் கார் மீது ஸ்கூட்டர் மோதியதில் பெண் பலியானார். அவரது குழந்தைகள் 2 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ஹர்ஜித். இவரது மனைவி நிரஞ்சனாதேவி (வயது 35). இவர்களுக்கு சுதிர்ஹாசன் (10) என்ற மகனும், ரியானிக்கா (3) என்ற மகளும் உள்ளனர். கூடலூர் துர்கையம்மன் கோவில் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் சுதிர்ஹாசன் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவனை வீட்டிற்கு நிரஞ்சனாதேவி ஸ்கூட்டரில் அழைத்து வந்தார். அவருடன் ரியானிக்காவும் இருந்தார். கம்பம்-கூடலூர் சாலையில் தனியார் மகளிர் கல்லூரி அருகே ஸ்கூட்டரை கார் ஒன்று வேகமாக முந்தி சென்றது. அந்த கார் திடீரென்று பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. அதில் நிரஞ்சனாதேவியின் ஸ்கூட்டர் காரின் பின்பகுதியில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நிரஞ்சனாதேவி படுகாயம் அடைந்தார். குழந்தைகள் 2 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக நிரஞ்சனாதேவி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கம்பம் புதிய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கிஷோர்குமார் (28) மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளையும் விட்டு விபத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.