ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி...!
|ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர், வெங்கடேஸ்வரா 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 42). இவர், சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மூக்கையாபாண்டியன், 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஸ்ரீபிரியாவுக்கு ஒரு அக்கா மற்றும் 2 தங்கைகள் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீபிரியா, தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு அவரும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் ஸ்ரீபிரியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
ரெயிலில் அடிபட்டு பலி
நேற்று காலை ஸ்ரீபிரியா தனது மொபட்டில் ஆவடி ரெயில் நிலையம் வந்தார். மொபட்டை அங்கு பார்க்கிங் செய்து விட்டு ஆவடி ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நடந்து வந்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு ஸ்ரீபிரியா, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி ரெயில்வே போலீசார், பலியான ஸ்ரீபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீபிரியா, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.